முகுந்த மாலா முன்னுரை
ஶ்ரீ முகுந்த மாலா என்னும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ குலசேகர மன்னரால் இயற்றப்பட்டது என்று ராஜ்ஞா க்ருதா க்ருத்தியம் குலசேகரேண என்னும் இந்த ஸ்லோகத்தில் இறுதி ஸ்லோக வரியில் தெரிகிறது
இந்த குலசேகர மன்னர் யார்? ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரும் குலசேகரப்பட்டினத்தை ஆண்ட மன்னரும் ஆவார். குலசேகராழ்வார் ஊர் திருவஞ்சைக்களம், பிறந்த நாள் மாசித் திங்கள் புனர்பூசம், கௌத்துவ மணியின் அவதாரம் என்பர். இவர் அரசு குலத்தைச் சேர்ந்தவர் அரியணை துறந்து திருமாலின் தொண்டரானார் . இராமன் மீது தீவிமான பக்தர் இவர் . இவர் தமிழ் மொழியோடு வடமொழியிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர் தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்த மாலையும் பாடியுள்ளார். திருவேங்கடத்தில் பறவையாக , மீனா , மானாகப் பிறக்க வேண்டும் என இறைவனை பாடுகின்றார். இன்னும் பக்தர்கள் நடந்து ஏறிச் செல்ல உதவும் படியாகக் கிடக்கவும் வரம் வேண்டினார். இன்றும் அங்குள்ள படிகள் குலசேகரன் படி என்று அழைக்கப்படுகின்றது. இவரது பாடல்கள் ஒப்பற்ற உணர்ச்சிப் பிழம்பாக இருப்பதைக் காணலாம். திருவரங்கத்தில் மூன்றாம் மதிலை இவர் கட்டியதாகக் கூறுவர். இவரது காலம் 9ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் வணக்கம்
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா திநே திநே |
தமஹம் ஶிரஸா வந்தே ராஜாநம் குலஶேகரம் ||
விளக்கம்:
எந்த அரசனுடைய பட்டிணதில் "ஸ்ரீரங்கத்திற்கு போவோம் வாருங்கள்" என்று நாள்தோறும் பறைசாற்றப் படுகிறதோ அந்த குலசேகர மன்னனைத் தலையால் வணங்குகிறேன்.
முகுந்த மாலா 1
ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்தப்ரியேதி பவலுண்டனகோவிதேதி |
நாதேதி நாகஶயனேதி ஜகன்னிவாஸே
த்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 ||
விளக்கம்:
என் முகுந்தனே! நான் எப்பொழுதும் ஸ்ரீவல்லபா! வரதா! தயாபரா! பக்தப்பிரியா! பிறவித் துன்பத்தைத் துடைப்பவனே! நாதா! நாகசயனா! ஜகந்நிவாசா! என்றெல்லாம் உன் திருநாமங்களையே அடிக்கடி சொல்லும்படி செய்வாயாக.
முகுந்த மாலா 2
ஜயது ஜயது தேவோ தேவகீநந்தனோ(s)யம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீப꞉ |
ஜயது ஜயது மேகஶ்யாமல꞉ கோமளாங்கோ꞉
ஜயது ஜயது ப்ருத்வீ-பாரநாஶோ முகுந்த꞉ || 2 ||
விளக்கம்:
இந்த தேவகி மைந்தன் வெற்றி கொள்ளட்டும். ஆயர் குல விளக்கு ஆன கண்ணன் வெற்றி கொள்ளட்டும். மெத்தென்ற திருமேனி படைத்த முகில்வண்ணன் வெற்றி கொள்ளட்டும். பூ பாரத்தை தீர்க்க வந்த முகுந்தன் வெற்றி கொள்ளட்டும்.
முகுந்த மாலா 3
முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தே
பவே பவே மே(s)ஸ்து பவத்-ப்ரஸாதாத் || 3 ||
விளக்கம்:
ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒரே ஒரு பொருளை மட்டுமே உன்னிடம் யாசிக்கிறேன் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய அருளால் உன் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.
முகுந்த மாலா 4
நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த்வ-மத்வந்த்வ-ஹேதோ꞉
கும்பீபாகம் குருமபி ஹரே! நாரகம் நாபநேதும் |
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய-பவநே பாவயேயம் பவந்தம் || 4 ||
விளக்கம்:
ஹே ஹரே இரு திருவடிகளையும் முக்திக்காகவோ கொடியதான கும்பீபாகம் இன்னும் நரகத்தை நீக்கவோ, அல்லது சொர்க்க லோகத்தில் இருக்கும் நந்தவனத்தில் மெத்தென்ற கொடி போன்ற பெண்கள் நிறைந்திருக்கும் அந்த நந்தவனத்தில் வாழும் சுகத்திற்காகவோ நான் வணங்கவில்லை. என் இதயமாகிய கோயிலில் ஒவ்வொரு பிறவியிலும் உன்னை நினைக்கவேண்டும் என்பதற்காகவே உன்னை வணங்குகிறேன்.
முகுந்த மாலா 5
நாஸ்தா தர்மே ந வஸுநிசயே நைவ காமோப-போகே
யத்யத் பவ்யம் பவது பகவந்! பூர்வகர்மாநுரூபம் |
ஏதத் ப்ரார்த்யம் மம பஹுமதம் ஜந்மஜந்மாந்தரே(s)பி
த்வத்-பாதாம்போருஹ-யுககதா நிஶ்சலா பக்திரஸ்து || 5 ||
விளக்கம்:
ஓ பகவானே எனக்கு தர்மத்தின் மீது விருப்பமில்லை, பணக்குவியல் மீதும் விருப்பமில்லை, காமத்தை அனுபவிப்பதிலும் விருப்பம் இல்லை, முன் வினைக்கு ஏற்றபடி எது எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடக்கட்டும். இப்பிறவியிலும் மறுபிறவியிலும் மிகவும் விருப்பமான கோரிக்கை இதுதான் உன் திருவடித் தாமரையை பற்றியதான அசையாத பக்தியானது இருக்கவேண்டும்.
முகுந்த மாலா 6
திவி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக! ப்ரகாமம் |
அவதீரித-ஶாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணே(s)பி சிந்தயாமி || 6 ||
விளக்கம்:
நரகாசுரனை அழித்தவனே! எனக்கு தேவலோகத்திலாவது, பூலோகத்திலாவது, நரகத்திலாவது எனக்கு வாசம் இருக்கட்டும் ஆனால் என்னுடைய மரண சமயத்திலும் மற்ற சமயத்திலும் சரத் காலத்தில் பூக்கின்ற மலர்களை பழிக்கும் அளவிற்கு அழகு வாய்ந்த உன் திருவடிகளையே நினைக்கின்றேன்.
முகுந்த மாலா 7
க்ருஷ்ண! த்வதீய-பதபங்கஜ-பஞ்ஜராந்த-
மத்யைவ மே விஶது மாநஸ-ராஜஹம்ஸ꞉ |
ப்ராண-ப்ரயாண-ஸமயே கபவாத-பித்தை꞉
கண்டா-வரோதந-விதௌ ஸ்மரணம் குதஸ் தே || 7 ||
விளக்கம்:
ஓ கிருஷ்ணா! என்னுடைய மனமாகிய ராஜ ஹம்சம் உன்னுடைய திருவடித் தாமரைகளாகிய கூண்டில் இப்பொழுதே புகுந்துவிடும். கபம், வாதம், பித்தம் இவைகளால் நெஞ்சம் அடைப்பட்டு குரல் தடுமாற கூடிய மரண காலத்தில் உன்னை எப்படி நான் நினைக்க முடியும்.
முகுந்த மாலா 8
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்தமந்த-ஹஸிதாநநாம்புஜம்
நந்தகோப-தநயம் பராத்பரம்
நாரதாதி-முனிப்ருந்த-வந்திதம் || 8 ||
விளக்கம்:
நான் எப்பொழுதும் ஹரியையே நிணைக்கிறேன் அவன் புன்முறுவல் பூக்கும் திருமுகத் தாமரையான்: நந்தகோபனின் மகன்: நாரதாதி முனிக்கணங்கள் வணங்கும் பராபரமான தெய்வம்.
முகுந்த மாலா 9
கரசரண-ஸரோஜே காந்திமந்நேத்ரமீநே
ஶ்ரமமுஷி புஜவீசி-வ்யாகுலே(s)காதமார்கே |
ஹரிஸரஸி விகாஹ்யாபீய தேஜோஜலௌகம்
பவமரு-பரிகிந்ந꞉ கேதமத்ய த்யஜாமி || 9 ||
விளக்கம்:
ஹரி என்பதே ஒரு தடாகம் இந்த தடாகத்தில் பகவானுடைய கைகால்களே தாமரை மலர்கள்; அவரது கண்களே மீன்கள்; அவரது புயங்களே அசையும் அலைகள்; பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸாரமாகிய பாலைவனத்தில் சுற்றி அலைந்து நான், இத்தடாகத்தில் மூழ்கி இறைவனது திருமேனி ஒளியாகிய ஜலத்தை பருகி எனது தாகத்தை அகற்றி கொள்கிறேன்.
முகுந்த மாலா 10
ஸரஸிஜ-நயநே ஸஶங்க-சக்ரே
முரபிதி மா விரமஸ்வ சித்த! ரந்தும் |
ஸுகதரமபரம் ந ஜாது ஜாநே
ஹரிசரண-ஸ்மரணாம்ருதேந துல்யம் || 10 ||
விளக்கம்:
ஓ மனமே தாமரைக் கண்ணனும், சங்கு சக்கரங்களை தரிப்பவனுமான முராரியை எக்கா எக்காலமும் விடாமல் தொடர்ந்து நினைத்திரு. ஹரியின் திருவடிகளே நினைத்தலாகிய அமிர்தத்திற்கு இணையானதும், உயர்ந்ததும் இவ்வுலகில் வேறெதுவும் எப்பொழுதும் இருப்பதாக நானறியேன்.
மாபீர்-மந்தமநோ விசிந்த்ய பஹுதா யாமீஶ்சிரம் யாதநா꞉
நாமீ ந꞉ ப்ரபவந்தி பாபரிபவ꞉ ஸ்வாமீ நநு ஶ்ரீதர꞉ |
ஆலஸ்யம் வ்யபநீய பக்தி-ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோதநகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம꞉ || 11 ||
விளக்கம்:
மூட மனமே , வீணாக யம தண்டனைகளைப் பலவிதமாக நினைத்து நினைத்துப் பயப்படாதே . பாபிகளுக்கு பகைகளான இவை சக்தியற்றவை . நமக்கு ஸ்ரீமந் நாராயணன் தெய்வம் . ஆகவே , அவை நம்மைத் துன்புறுத்த முடியாது . எனவே , சோம்பலின்றி , பக்தியால் மட்டும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியவனான நாராயணனைத் தியானம் செய் . உலகத்தார் எல்லோருடைய கஷ்டங்களையும் நீக்குகிறவன் தன் பக்தனுடைய கஷ்டத்தை அகற்றமாட்டானா ?
முகுந்த மாலா 12
பவஜலதி-கதாநாம் த்வந்த்வ-வாதாஹதாநாம்
ஸுததுஹித்ரு-களத்ர-த்ராண-பாரார்திதாநாம் |
விஷம-விஷய-தோயே மஜ்ஜதா-மப்லவாநாம்
பவது ஶரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் || 12 ||
விளக்கம்:
சம்சாரமாகிய சாகரத்தில் உள்ளவர்களும் சீதம் உஷ்ணம் சுகம் துக்கம் போன்ற இரட்டை களாகிய காற்றால் அடிக்கப்பட்டவர்களும் பிள்ளை பெண் மனைவி இவர்களை காப்பாற்றுதல் ஆகிய பாரத்தால் வருந்துபவர்களும், கொடிய விஷய சுகங்களாகிய ஜலத்தில் மூழ்கியவர்களும் ஓடம் இல்லாதவர்களுமான மனிதர்களுக்கு மகாவிஷ்ணுவாகிய ஓடம் ஒரே ஒரு புகலிடமாக ஆகட்டும்
முகுந்த மாலா13
பவஜலதி-மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதமஹமிதி சேதோ மா ஸ்ம கா꞉ காதரத்வம் |
ஸரஸிஜத்ருஶி தேவே தாவகீ பக்திரேகா
நரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத்வஶ்யம் || 13 ||
விளக்கம்:
ஏ மனமே! பிறப்பு, இறப்பு என்னும் ஸம்ஸாரமாகிய கடல் மிக ஆழமானது; கடத்தற்கரியது; 'இதை எப்படிக் கடப்பேன்' என்று பயப்படாதே . தாமரைக் கண்ணனும் நரகாசுரனை அழித்தவனுமான பகவானிடம் பக்தி செய்வாயானால் அது ஒன்றே உன்னைப் பிறவிக்கடலைத் தாண்டவைத்து விடும் .
முகுந்த மாலா 14
த்ருஷ்ணாதோயே மதந-பவநோத்தூத-மோஹோர்மி-மாலே
தாராவர்தே தநய-ஸஹஜ-க்ராஹ-ஸங்காகுலே ச |
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்
பாதாம்போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச || 14 ||
விளக்கம்:
ஹே பரந்தாமனே பேராசையாகிய நீரையுடையதும், காமமாகிய காற்றினால் மேலுக்கு எழுப்பப்பட்ட மோகமாகிய அலைகளின் வரிசையுள்ளதும் மனைவியாகிய சூழலுடன் கூடியதும் மக்கள், உடன்பிறந்தோர்களாகிய முதலைக் கூட்டங்களால் குழம்பியதுமான ஸம்ஸார மென்னும் பெரியதான கடலில் மூழ்கியவர்களான எங்களுக்கு ஓ வரமளிப்பவரே! உம்முடைய திருவடித் தாமரைகளின் மீது பக்தியாகிய ஓடத்தை கொடுப்பீராக.
முகுந்த மாலா 15
மாத்ராக்ஷம் க்ஷீணபுண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதாப்ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யபந்தம் தவ சரிதமபாஸ்யாந்ய தாக்யாநஜாதம் |
மாஸ்மார்ஷம் மாதவ த்வாமபி புவனபதே! சேதஸாபஹ்நுவாநாந்
மாபூவம் த்வத்ஸபர்யா-வ்யதிகர-ரஹிதோ ஜந்மஜந்மாந்தரே(அ)பி || 15 ||
விளக்கம்:
லோகநாதா! மாதவா ஒரு கணமாவது உம்மிடம் பக்தி செய்யாத பாவிகளக் காணமாட்டேன். உன் கதைகளைத் தவிர மற்ற கதைகளைக் கேட்கமாட்டேன். உன்னை மனத்தால் வெறுப்பவர்களை என் மனத்தாலும் நினைக்க மாட்டேன். நான் உனக்குப் பூஜை செய்யாதவனாக எப்பொழுதும் இருக்கமாட்டேன்.
முகுந்த மாலா 16
ஜிஹ்வே! கீர்த்தய கேஶவம் முரரிபும் சேதோ! பஜ ஶ்ரீதரம்
பாணித்வந்த்வ! ஸமர்சயாச்யுதகதா꞉ ஶ்ரோத்ரத்வய த்வம் ஶ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரேர்-கச்சாங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண! முகுந்தபாத-துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம் || 16 ||
விளக்கம்:
நாக்கே! கேசவனைத் துதி செய்வாயாக; மனமே! முராரியை பஜனை செய்வாயாக; கைகளே, ஸ்ரீதரனுக்கு அர்ச்சனை செய்வாயாக ; காதுகளே! அச்சுதனின் கதைகளைக் கேட்பாயாக; கண்களே, கிருஷ்ணனை பார்ப்பாயாக; மூக்கே! முகுந்தனின் பாததுளஸியை நுகர்வாயாக! தலையே! ஆண்டவனை வணங்குவாயாக.
முகுந்த மாலா 17
ஹே லோகா꞉ ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதேஶ்-சிகித்ஸாமிமாம்
யோகஜ்ஞா꞉ ஸமுதாஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாதய꞉ |
அந்தர் ஜ்யோதிரமேயமேக-மம்ருதம் க்ருஷ்ணாக்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷதம் விதநுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 |
விளக்கம்:
மக்களே, கேளுங்கள். பிறப்பு, இறப்பென்னும் நோய்க்கு யாஜ்ஞவல்கியர் போன்ற முனிவர்கள் கூறிய மருந்து இதுதான். அதாவது, நம்முள் அந்தர்யாமியாக உள்ள ஜோதிமயனான கண்ணன்தான். அவன் நாமங்களாகிய அம்ருதத்தைப் பானம் செய்தால் சாசுவதமான மோக்ஷசுகம் கிடைக்கும். ஆகவே இதை அருந்துங்கள்.
முகுந்த மாலா 18
ஹே மர்த்யா꞉ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத꞉
ஸம்ஸாரார்ணவ-மாபதூர்மி-பஹுளம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்திதா꞉ |
நாநா-ஜ்ஞாந-மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்வம் முஹு꞉ || 18 ||
விளக்கம்:
ஆபத்துக்களாகிய அலைகள் நிறைந்த பிறவிக் கடலில் நன்றாக மூழ்கி இருக்கின்ற ஓ மனிதர்களே! உங்களுக்கு உயர்ந்த நன்மையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள் பலவிதமான அறிவுகளை ஒதுக்கிவிட்டு மனதில் ஓம் எனும் பிரணவத்துடன் கூடிய நமோ நாராயணாய என்னும் இந்த மந்திரத்தை நமஸ்காரத்துடன் அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்
முகுந்த மாலா 19
ப்ருத்வீ ரேணுரணு꞉ பயாம்ஸி கணிகா꞉ பல்கு-ஸ்புலிங்கோ (அ) நலஸ்-
தேஜோ நிஶ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷ்மம் நப꞉ |
க்ஷுத்ரா ருத்ர-பிதாமஹ-ப்ரப்ருதய꞉ கீடா꞉ ஸமஸ்தாஸ்-ஸுரா꞉
த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி꞉ || 19 ||
விளக்கம்:
உன்னுடைய மகிமையைக் காணும்போது, இந்த பூமி மிகச் சிறிய தூசி போலும், ஜலமெல்லாம் ஒரு துளிபோலும், நெருப்பு ஒரு பொறி போலும், வாயு ஒரு மூச்சுக்காற்று போலும், ஆகாயம் சிறிய துவாரம் போலும், ருத்ரன், பிரமன் போன்ற தேவர்களனைவரும் சிறிய புழுக்கள் போலும் காணப்படுகிறார்களே. அத்தகைய எல்லை கடந்த உம்முடைய வெற்றி கொள்கிறது.
முகுந்த மாலா 20
பத்தேநாஞ்ஜலிநா நதேந ஶிரஸா காத்ரை꞉ ஸரோமோத்கமை꞉கண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்கீர்ண-பாஷ்பாம்புநா |நித்யம் த்வச்சரணாரவிந்த-யுகள-த்யாநாம்ருதாஸ்வாதிநாம்!அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ! ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் || 20 || விளக்கம்:
ஹே தாமரைக் கண்ணனே! கைகூப்பி, தலைவணங்கி, உடல் மயிர்க் கூச்சமெடுக்க, குரல் தழுதழுக்க, கண்களில் நீர் பெருக, உன் திருவடித் தாமரைகளை நினைத்தலாகிய அமிருத ரஸத்தை எப்பொழுதும் பருகிக் கொண்டு என் வாழ்நாள் நிறைவு பெறுவதாகுக.